தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், தனது திருமண வாழ்க்கை குறித்து விஜய் நெகிழ்ச்சியுடன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த ‘பூவே உனக்காக’ (1996) திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அவரது தீவிர ரசிகையாக மாறியவர் சங்கீதா. இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் சொர்ணலிங்கத்தின் மகளான இவர், லண்டனில் வசித்து வந்தார். விஜய்யை நேரில் சந்திப்பதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்த சங்கீதா, படப்பிடிப்பு தளத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார்.
ஆரம்பத்தில் ரசிகையாக அறிமுகமான சங்கீதாவின் குணாதிசயங்கள் விஜய்யின் குடும்பத்தாருக்குப் பிடித்துப் போகவே, இரு வீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமணம் கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்னையில் இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, 1998-இல் இங்கிலாந்தில் இவர்களது திருமணப் பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் அந்தப் பழைய நேர்காணலில் தனது திருமணம் குறித்து விஜய் கூறியதாவது, “லண்டனிலிருந்து என்னைப் பார்க்க ஒரு ரசிகை வந்திருப்பதாக என் உதவியாளர் கூறினார். அவர்தான் சங்கீதா. முதலில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பிறகு எனது பெற்றோரைச் சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஒருமுறை ‘காதலுக்கு மரியாதை’ படப்பிடிப்பின்போது என் தந்தை என்னிடம் வந்து, ‘சங்கீதாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? அவரைத் திருமணம் செய்துகொள்கிறாயா?’ எனக் கேட்டார். நான் ஒரு வாரம் அவகாசம் கேட்டுவிட்டு, பிறகு சம்மதம் சொன்னேன். திருமணத்திற்குப் பிறகுதான் சங்கீதா மீது எனக்குக் காதல் மலர்ந்தது. அந்த உணர்வு மிகவும் அழகானது.”
இவ்வாறு விஜய் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். நீண்ட காலமாகக் கோலிவுட்டின் ‘முன்மாதிரி தம்பதிகளாக’ வலம் வந்த இவர்களுக்கு இடையே தற்போது எழுந்துள்ள விவாகரத்துச் செய்திகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
