திரையுலகில் வசூல் சாதனைகளை முறியடித்த ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அல்ல போலேலோ’` பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை விட இரண்டாம் பாகத்தை பல மடங்கு பிரம்மாண்டமாக மாற்றியுள்ளனர் படக்குழுவினர். முதல் பாகத்தில் கௌரவத் தோற்றத்தில் கலக்கிய மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு என முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. மேலும், தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் பாடலில் நடிகை பூர்ணா தனது துள்ளட்டமான சிறப்பு நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல்வேறு அழகிய பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்படம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பிற்கு நடுவே, வருகிற அக்டோபர் 15-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமை ரூ.160 கோடிக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிந்த இசையில் ‘அல்ல போலேலோ’ பாடல் தியேட்டர்களை மீண்டும் அதிர வைக்கத் தயாராகிவிட்டது!
