2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட ‘சிலிண்டர்’ விளம்பரம் தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த விளம்பரத்தில், சிலிண்டர் வாங்குவதற்குப் பெண் ஒருவர் தனது நகைகளைக் கழற்றிக் கொடுப்பது போன்றும், அதே வேளையில் பின்னணியில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பாடுவது போன்றும் வஞ்சப்புகழ்ச்சி அணியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அப்போது வைரலான இந்த வீடியோ, தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வட இந்தியாவிலும் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, உலகளாவிய சூழலால் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்த பழைய விளம்பரத்தைப் புதுப்பித்து 2026 தேர்தலிலும் தீவிரமாகப் பயன்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இந்த விளம்பரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய காரணங்களால் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், அதைத் தங்களுக்கு எதிரான அரசியல்ஆயுதமாக திமுக பயன்படுத்துவதை பாஜக தர்மசங்கடமாக உணர்கிறது.

புஷ்பவனம் குப்புசாமியின் பாடல் வரிகளுடன் சர்காஸமாக வடிவமைக்கப்பட்ட இந்த விளம்பரம், தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்க பாஜகவும் தயாராகி வரும் நிலையில், தேர்தல் களத்தில் சிலிண்டர் விவகாரம் மீண்டும் ஒரு முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது.