பாமக பிளவுபட்ட பிறகு அன்புமணி ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சசிகலாவின் புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இந்த முடிவிற்குச் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கும் இதில் விருப்பமில்லை எனக் கூறினார்.

தான் விரைவில் அடுத்தகட்ட முடிவை அறிவிக்கப்போவதாக அருள் கூறியதால், அவர் திமுகவில் இணையக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.தனக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறிய அருளே தனது முடிவை எதிர்த்ததால் ராமதாஸ் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார். இதற்கிடையே, கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த 9 நிர்வாகிகளை நேரில் அழைத்து எச்சரித்த ராமதாஸ், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் நிற்கலாம் என்றும், விருப்பம் இல்லாதவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஒருவேளை தேர்தல் வேலை செய்யப் பிடிக்கவில்லை என்றால், தேர்தல் முடியும் வரை ஆன்மிகப் பயணம் அல்லது சுற்றுலா சென்றுவிடுங்கள் என்று அவர் கறாராகக் கூறியுள்ளார்.