கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 50 வயது லட்சுமி தேவம்மா, கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலாளியான 55 வயது நாகராஜ் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதனிடையே, லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருடன் புதிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நாகராஜைத் தவிர்த்துவிட்டு அந்த இளைஞருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனையறிந்த நாகராஜ், “அவனோடு பேசாதே” எனக் கண்டித்தும் லட்சுமி அதைப் பொருட்படுத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தான் வேலை செய்யும் தோட்டத்திற்கு லட்சுமியை ஆசையாகப் பேசி வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்த பிறகு, அந்த 29 வயது இளைஞரைப் பற்றி மீண்டும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற நாகராஜ் அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் லட்சுமியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலையை மறைப்பதற்காக லட்சுமியின் உடலை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று நாகராஜ் தீ வைத்து எரித்துள்ளார். மறுநாள் பாதி எரிந்த நிலையில் உடலைக் கண்ட தோட்ட உரிமையாளர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கவே, வழக்குப் பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலன் நாகராஜை அதிரடியாகக் கைது செய்தனர்.
