மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், காதலனுடன் இருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் சந்தேகத்துக்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்பூரில் 24 வயதான விஷ்ணுமாயா என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரது காதலன் ஆசிஷ் மகர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலிக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக அவர் மீது போலீஸார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 25 மற்றும் 26-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், செம்பூரில் உள்ள ஒரு வீட்டில் விஷ்ணுமாயா மயங்கிய நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கி, சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விஷ்ணுமாயா வேறொரு இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக ஆசிஷ் சந்தேகித்ததாக போலீஸாருக்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், அவருக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். மேலும், முதலில் விஷ்ணுமாயாவின் உயிரிழப்பை இயற்கையான மரணம் போல் காட்ட முயன்றதாகவும் ஆசிஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து செம்பூர் காவல் நிலைய போலீஸார் ஆசிஷ் மகரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விஷம் எங்கிருந்து பெறப்பட்டது, சம்பவம் எவ்வாறு நடைபெற்றது, இதன் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.