நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள கிருஷி விகாஸ் வங்கி கிளை முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியது. போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வங்கி கட்டிடத்திற்குள் வண்டல் மண்ணும் சேறும் பெருமளவில் குவிந்தன.

 

வெள்ள நீர் வடிந்ததைத் தொடர்ந்து, வங்கி லாக்கருக்குள் சிக்கியிருந்த பணத்தையும் நகைளையும் மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரக் கடினப் போராட்டத்திற்குப் பிறகு, சேறுகளை அகற்றி லாக்கரை அடைந்த மீட்புக் குழுவினர், வங்கிக்குள் இருந்த சொத்துக்களைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.

 

இந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 50 கோடி நேபாள ரூபாய் மதிப்புள்ள தங்கம், 1.5 கோடி ரூபாய் ரொக்கப் பணம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் வங்கியின் முக்கிய ஆவணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. வங்கியின் பொக்கிஷங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதால் அதிகாரிகளும் நிர்வாகமும் நிம்மதியடைந்துள்ளனர்.

 

வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்து இடிபாடுகள் குவிந்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இன்னமும் சிரமங்கள் நீடித்து வருகின்றன. இத்தகைய பேரிடர் காலத்தில் நாட்டின் முக்கியச் சொத்துக்களை மீட்டெடுத்தது நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக அமைந்தது.

 

இப்பேரழிவு குறித்துப் பேசிய நேபாள பிரதமர் பாலன் ஷா, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 781 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளும் சேத மதிப்பீடுகளைக் கணக்கிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.