2029-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் நரேந்திர மோடியே நாட்டின் பிரதமராகத் தொடர்வார் என ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் (TDP) தலைவருமான சந்திரபாபு நாயுடு பேசியுள்ளது தேசிய அரசியலில் மாபெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மத்திய அரசிலும் தேசிய அளவிலும் பாஜகவுக்குத் தனது முழுமையான ஆதரவு உண்டு என்பதை வெளிப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ள இந்த அறிக்கை, ஆந்திர அரசியலின் உள்சூட்சுமங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

​தற்போது ஆந்திர மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் தெலுங்கு தேசம் கட்சி, சில உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான சவால்களால் ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே, கூட்டணிக் கட்சியான ஜனசேனா தலைவரும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், 2029 தேர்தலை மனதில் கொண்டு தனது சொந்த செல்வாக்கை உயர்த்தத் தொடங்கியுள்ளார். பவன் கல்யாணின் இந்த நகர்வுகள் மற்றும் அவரிடமிருந்து வரும் மறைமுகக் குடைச்சல்கள், சந்திரபாபு நாயுடுவுக்குக் கூட்டணிக்குள்ளேயே புதிய அரசியல் நெருக்கடிகளை உருவாக்க ஆரம்பித்துள்ளன.

​மற்றொரு புறம், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP கட்சியுடன் பாஜக தலைமை காட்டி வரும் நெகிழ்வுப்போக்கும் இணக்கமும் சந்திரபாபு நாயுடுவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ YSRCP கட்சியுடன் பாஜக கைகோர்த்துவிட்டால், அது ஆந்திராவில் தனது ஆட்சி அதிகாரத்திற்கும் கூட்டணி நிலைத்தன்மைக்கும் ஆபத்தாக முடிந்துவிடும் என TDP தலைமை கருதுகிறது. இதனால் பாஜக தலைமையின் நம்பிக்கையை முழுமையாகத் தக்கவைத்துக் கொள்ளவும், ஜெகன் மோகனின் பக்கத்திற்கு பாஜக சாயாமல் தடுக்கவுமே சந்திரபாபு நாயுடு மோடியை இப்படிப் புகழ்ந்து பேசிப் பாதுகாப்பு வளையத்தை அமைத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.