மத்தியப் பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் 25 வயது பெண் பிரசவத்துக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தப் பெண்ணும், பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர். உயிரிழப்புக்கு முன்பு அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு குடும்பத்தினரிடம் கதறிக் கேட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ரீவாவைச் சேர்ந்த கல்பனா மிஸ்ரா, ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு பிரசவத்துக்காக சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரசவத்துக்குப் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மருத்துவமனையில் இருந்த கல்பனா, தனக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் தன்னை காப்பாற்றுமாறும் உறவினர்களிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
Heartbreaking: A 25 year old woman Kalpana Mishra died with her newborn during her first delivery at Gandhi Memorial Hospital in Rewa home district of MP Deputy CM and Health Minister Rajendra Shukla.
शब्द: “ऐ बाबू हमको बचा लो ये हमको मार डालेंगे “🙏
A video shows her crying… pic.twitter.com/Hq8oPNXiWh
— Ramesh Speaks (@rameshofficial0) August 27, 2026
இதையடுத்து, கல்பனாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த விதம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, மயக்க மருந்து செலுத்தப்பட்ட பின்னர் அவர் மீண்டும் சுயநினைவுக்கு வரவில்லை என்றும், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் குறைபாடு இருந்ததாகவும் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், மருத்துவ நடைமுறைகளின்படியே சிகிச்சை அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
சம்பவத்தையடுத்து மருத்துவமனை முன்பு கல்பனாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், சம்பவத்தின்போது பணியில் இருந்த சாதனா வர்மா, சீமா முஜால்டே ஆகிய இரு செவிலியர்கள் முதல்கட்ட நடவடிக்கையாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கான உண்மையான காரணம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் ஏதேனும் தவறு நடைபெற்றதா என்பது குறித்து உயர்நிலைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
