வரும் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விநியோகிக்கப்படும் இலவச வேட்டி திட்டத்தில், வழக்கமாக வழங்கப்பட்டு வந்த 8 முழத்திற்குப் பதிலாக 4 முழ வேட்டி மட்டுமே வழங்கப்படும் என அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார். இந்தத் திடீர் மாற்றத்தின் காரணமாக வேட்டி உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் தங்களின் உற்பத்தி அளவு மற்றும் கூலி குறைந்து பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், நெசவாளர்களின் இந்த வாழ்வாதாரப் பாதிப்பை அரசு கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விரிவான பதிலளித்துப் பேசிய கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, பொதுமக்கள் தரப்பிலிருந்து வெளுக்கப்படாத (Unbleached) 8 முழ வேட்டிக்கு பதிலாக, உடனே உடுத்துவதற்கு ஏதுவாக வெளுக்கப்பட்ட (Bleached) 4 முழ வேட்டியே வசதியாகவும் விருப்பமாகவும் உள்ளதாகத் தொடர்ந்து கோரிக்கைகள் வந்ததாகத் தெரிவித்தார். முதலமைச்சர் அவர்கள் எப்போதும் மக்களுக்கு எது பிடிக்குமோ, அவர்களின் பயன்பாட்டிற்கு எது உகந்ததாக இருக்குமோ அதையே அரசாகச் செய்ய வேண்டும் எனக் அறிவுறுத்தியுள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து இந்த முறை 4 முழ வேட்டியும், பெண்களுக்காகப் பிரத்யேகமாக ஜரிகை வைக்கப்பட்ட உயர்தரச் சேலைகளும் பொங்கல் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு அதே வேளையில் நெசவாளர்களின் நலன்களும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி படத் தெரிவிக்கப்பட்டது.
