மும்பையின் வடலா பகுதியில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு வளாகத்தில் நடந்த சோகமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதாவது 52 வயதுடைய நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக கட்டிடத்தின் 18-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஜூலை 13-ஆம் தேதி, மத்திய மும்பையில் உள்ள மாதோஸ்ரீ சதன் என்ற குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்தார் என்றும், சம்பவ நேரத்தில் அவரது வீட்டின் கழிப்பறை பயன்படுத்தப்பட்ட நிலையில், அவர் அவசர அவசரமாக வெளியே ஓடி, லிஃப்ட் அருகிலுள்ள திறந்த தண்டின் விளிம்பில் அமர்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பெரும் வயிற்றுவலியை தாங்க முடியாமல் அவர் அந்த இடத்தில் உட்கார்ந்தபோது, திடீரென சமநிலையை இழந்து கீழே விழுந்தார். இவர் உடனடியாக தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதெனவும், ஆனால் அங்கு சேரும் முன்னரே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
பொதுமக்கள் பார்வையில் நேர்ந்த இந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்து மரண அறிக்கையை (Accidental Death Report – ADR) பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் கடந்த சில மாதங்களாக வேலை இன்றி இருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் வயிற்று போக்கின் காரணமாக தற்கொலை செய்து உயிர் இழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
