மதுரை மேற்கு தொகுதியில் 4-வது முறையாகப் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சோலையழகுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
​அப்போது பேசிய செல்லூர் ராஜூ, “அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவமாக இருக்கிறார்” எனப் புகழ்ந்து தள்ளினார்.

​செல்லூர் ராஜூவின் இந்தப் பேச்சை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். “செல்லூர் ராஜூவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது; தேவரை அவமதிக்கும் வகையில் பேசிய அவருக்கு மதுரை மேற்கு தொகுதி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் மதுரை அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.