தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகத் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், பல ஆண்டுகளாகத் தேர்வுக்குத் தயாராகி வந்த சுமார் 9,000 இளைஞர்களின் கனவுகள் நசுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் “திமுக மாடல் அரசாங்கம் நிர்வாகச் சீர்கேட்டினால் நிலைகுலைந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சாட்சி” என்று குறிப்பிட்ட அவர், பல இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமலும், குளறுபடிகளுடனும் தேர்வுகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டி, “வாழ்வாதாரத்திற்காகப் போராடும் இளைஞர்களுக்குத் தேர்வு எழுதுவதே ஒரு போராட்டமாக மாறியிருப்பது வேதனையிலும் வேதனை” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் திமுக அரசு இளைஞர் நலனில் அக்கறை காட்டாமல், அவர்களின் எதிர்காலத்தை அரசியல் நாடகங்களுக்குப் பயன்படுத்துவதாகத் தமிழிசை விமர்சித்துள்ளார். ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஆர்வத்துடன் வந்த நிலையில், அரசின் முறையற்ற திட்டமிடலால் அலைக்கழிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை என்று குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையான திட்டமிடலுடன் மறுதேர்வை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
