பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரை சொல்லி, அவரது குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளதாக கூறி, கோவை அன்னூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், அண்ணாமலை தரப்பில் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அன்னூர் அருகே குமாரபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் – நாகமணி தம்பதியரின் இளைய மகன் அருணாச்சலம், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், அவரது சகோதரர் திருமூர்த்தி கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்ததாகவும், அந்த வழக்கில் கிடைத்த ₹50 லட்சம் இழப்பீட்டுக்குப் பின்பு, பா.ஜ.கவை சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராஜேஷ் ஆகியோர் ₹10 லட்சம் கட்டாயமாக வாங்கியதாகவும், தற்போது தேர்தல் வருவதால் மீண்டும் ₹10 லட்சம் தேவை என அண்ணாமலையின் பெயரைச் சொல்லி மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பணம் தராதிருப்பின், அவரது பெற்றோர் உள்பட குடும்பத்தை முழுவதும் கொலை செய்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலையின் உதவியாளர், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “இது தொடர்பாக அண்ணாமலைக்கும் சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவரது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டிய பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன், ராஜேஷ் மற்றும் கோகுல கண்ணன் ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
