த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக, த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார், சமூக வலைதள பதிவைத் தொடர்புபடுத்தி ஆதவ் அர்ஜூனா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீட்டை அறிவித்தது. அதில் கூடுதலாக, த.வெ.க. சார்பாக ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கூறப்பட்டது. சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாகியும், கரூர் மக்களிடையே சோகம் நீடித்து வருகிறது. பல அரசியல் தலைவர்கள் கரூருக்கு சென்று குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆனால், த.வெ.க தலைவர் விஜய், இந்நேரத்தில் நேரில் சென்று சந்திக்காததற்காக, நீதிமன்றமும் கேள்வி எழுப்பியது.

இந்த சூழ்நிலையில், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும், நிதியுதவியை வழங்கவும் விஜய் அடுத்த வாரம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, வழிகாட்டு அனுமதிக்காக நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் நீதிமன்றம் அனுமதி வழங்கும் பட்சத்தில், விஜய் அடுத்த வாரம் கரூருக்கு செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வங்கி விவரங்களை சேகரிப்பதாகவும் பணத்தை வங்கியில் அனுப்பிய பிறகு நடிகர் விஜய் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.