கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) தலைநகரான திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் உச்சகட்டமாக, கோழிக்கோடு மாவட்டம் இரவலா பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் அதன் முன் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி சிலையை நேற்று நள்ளிரவு கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராட்சதக் கற்கள் மற்றும் பெரிய ஆயுதங்களைக் கொண்டு இந்திரா காந்தி சிலையை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புக் பணியில் ஈடுபட்டிருந்தும், அவர்கள் எந்தத் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், பல பகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வீடுகள் மீதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாகக் கேரளாவில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியே இந்தக் கலவரங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.