துபாய் விமானக் கண்காட்சியில் (ஏர் ஷோ) விபத்துக்குள்ளான இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தின் விமானி விங் கமாண்டர் நமாம்ஸ் சியாலுக்கு (Wing Commander Namansh Syal), ரஷ்யாவின் புகழ்பெற்ற சாகச விமானக் குழுவான ‘ரஷியன் நைட்ஸ்’ ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலியைச் செலுத்தியுள்ளது.

இந்தக் குழுவினர், சியாலின் தியாகத்தைப் போற்றும் விதமாகக் காற்றில் ‘மிஸ்ஸிங் மேன்’ (Missing Man Formation) என்ற சாகசத்தை நிகழ்த்திக் காட்டினர். “கடைசிப் பயணத்தில் திரும்பி வராத சகோதரர்களுக்கு” மரியாதை செலுத்தும் வகையில் இந்தச் சாகசத்தை நிகழ்த்தியதாக ரஷியன் நைட்ஸ் குழு தெரிவித்தது. இந்தச் செயல், உலகளாவிய விமானத் துறையினரிடையே ஏற்பட்ட ஆழ்ந்த சோகத்தைப் பிரதிபலித்தது.

“>

 

அமெரிக்கச் சாகச விமானி டெய்லர் “ஃபெமா” ஹிஸ்டர், இந்த விபத்திற்குப் பிறகு விமானத் தளத்தில் நிலவிய சோகமான சூழ்நிலையை விவரித்துள்ளார். விமான விபத்து நடந்த பிறகு, சியாலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தங்கள் இறுதி நிகழ்ச்சியிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

“வெறும் வாகன நிறுத்துமிடத்தின் அருகே நிற்கும் இந்தியப் பராமரிப்புக் குழு, தரையில் கிடக்கும் விமானியின் ஏணி, அவரது வாடகைக் காரில் இன்னும் இருக்கும் உடமைகள்… இவை அனைத்தும் ஒரு நொடியில் ஏற்பட்ட புதிய யதார்த்தத்தைக் காட்டுகின்றன” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

சியாலின் உடல் ராணுவ மரியாதையுடன் சூலூர் விமானப் படைத் தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் அவரது பூர்வீக கிராமமான ஹிமாச்சலப் பிரதேசம் காங்ராவில் தகனம் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.