1912-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையை மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது. உலகையே அதிர்ச்சியடையச் செய்த இந்த விபத்து பின்னர் 1997-ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றது.
இந்நிலையில், டைட்டானிக்கில் பயணித்தவர்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டு காலம் காலமாக ஏலத்திற்கு விடப்படுகிறது. அதன்படி, அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்பவருக்கு சொந்தமான தங்கக் கடிகாரம் ஒன்று, இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்திற்கு விடப்பட்டது.
இந்த தங்கக் கடிகாரம் சுமார் ரூ.20.7 கோடி மதிப்பில் விற்கப்பட்டு புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப்பொருட்களில் இதுவரை எட்டப்பட்ட அதிகபட்ச ஏலத் தொகை என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விற்பனையுடன் டைட்டானிக் தொடர்பான நினைவுப்பொருட்களின் மொத்த ஏலத் தொகை ரூ.35 கோடியை தாண்டியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
