முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட   எம்பி ஆர். தர்மர்,  நேற்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து செயல்பட்டபோது மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ்-இன் பரிந்துரையின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ஆர். தர்மருக்கு மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஓபிஎஸ் நீக்கப்பட்டபோது, தர்மர் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலேயே நீடித்து வந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்க முடிவு செய்த தர்மர், நேற்று  மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரைச் சந்தித்து சால்வை அணிவித்தார். இந்தச் சந்திப்பின் மூலம் அவர் முறைப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மர் கூறியதாவது: “யாருடனும் எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட கருத்து வேறுபாடும் கிடையாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கவும், தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். நாடாளுமன்ற ஆவணங்களின்படி நான் ஏற்கனவே அதிமுக எம்.பி-யாகவே நீடிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

ஓபிஎஸ் தரப்பின் முக்கிய ஆதரவாளராக இருந்த தர்மர், தற்போது இபிஎஸ் அணிக்கு மாறியுள்ளது தமிழக அரசியலில், குறிப்பாக தென் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.