“திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்; தீமைக்கு மாற்று ஒருபோதும் தீமையாக இருக்க முடியாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். தாம்பரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது: “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது? கடந்த முறை அவர்கள் பெண்களுக்கு இலவசப் பேருந்து என்றார்கள், இப்போது இவர்கள் ஆண்களுக்கு இலவசப் பேருந்து என்கிறார்கள். பெயர்கள் மாறுகிறதே தவிர, ஆட்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை. ஊழலற்ற நிர்வாகம் என்பது இவர்களிடம் கிடையாது. தமிழகத்தில் தற்போது மக்கள் நலன் வளரவில்லை, மாறாகக் கடன் வளர்ச்சிதான் அதிகமாக உள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் கொள்கை பேசுவது கேவலமானது. அதிகப் பணமும், தொகுதிகளும் கொடுப்பவர்களுடன் கூட்டணி சேருவதே இவர்களின் வாடிக்கை. ஒரு கட்சியுடன் சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்றால், எதற்குத் தனியாகக் கட்சி நடத்த வேண்டும்? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தினார். மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை இருந்தால், மதுவை ஒழிப்பவர்களுடன் அல்லவா கூட்டணி வைக்க வேண்டும்? ஏன் அப்படிச் செய்யவில்லை?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, தம்பி விஜய் கேட்ட சின்னமே அவருக்குக் கிடைத்துள்ளதால் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் எனது கோட்பாட்டுக்கும் இங்குப் போட்டியே இல்லை. அவர்கள் ஓட்டுக்குக் காசு கொடுக்கிறார்கள்; நாங்களோ வாக்கை விற்க வேண்டாம் என்று மக்களிடம் பேசி வருகிறோம். அமைச்சரவையில் இருப்பவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவிலிருந்து வந்தவர்கள்தான். இப்படியிருக்க திமுகவுக்கு அதிமுக எப்படி மாற்றாக முடியும்?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
