தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பது.

அந்த தோல்சார் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு தனி திட்டம் செயல்படுத்தப்படும். பணியின் போது தூய்மை பணியாளர்கள் இறக்க நேரிட்டால் தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலமாக நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியுடன் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.

தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும் அவர்களுக்கு உயர் கல்வி கட்டண சலுகை மட்டும் இன்றி விடுதி, புத்தக கட்டணம் வழங்கும் வகையில் புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு வருகிற மூன்று ஆண்டுகளில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் உதவியோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள் கீழ் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி தரப்படும்.

கிராமப்புறங்களில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முன்னுரிமை கொடுக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக கொடுக்கப்படும். முதற்கட்டமாக இந்த திட்டம் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படும்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திட சுய தொழில் தொடங்கும் போது அந்த தொழில் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3.5 லட்சம் வரை மானியமாக கொடுக்கப்படும். இந்த கடனை தவறாமல் திருப்பி செலுத்துபவர்களுக்கு 6 விழுக்காடு வட்டி மானியமும் கொடுக்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.