தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி.யின் தனிப்படை காவல்துறையினர் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் தாக்கியதால் தான் பாலகிருஷ்ணன் இறந்ததாக அவரது சகோதரர் மாரியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், என்னுடைய தம்பி பாலகிருஷ்ணன் மீது சில குற்றவழக்குகள் உள்ளன. கடந்த டிசம்பரில் நண்பர்களுடன் ஈரோடு சென்ற போது சென்னிமலை காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போலீஸ் தாக்கியதில் தன்னுடைய சகோதரர் பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தனது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். பெருந்துறை மருத்துவமனை சென்று பார்த்தபோது தம்பியின் உடலில் லத்தியால் அடித்ததற்கான காயங்கள் இருந்தது. மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மாஜிஸ்திரேட் மேற்பார்வையில் பாலகிருஷ்ணன் உடலை உடற்கூறு பரிசோதனைஆய்வு செய்யவேண்டும் எனவும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் சந்தேக மரணம் என பதிவான வழக்கை நியாயமாக விசாரிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.