இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன் (வயது 54), 2019 முதல் 2024 வரை பர்ட்டன் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்தவர். இவரது முன்னாள் கணவரும், அதே தொகுதியின் முந்தைய எம்.பி.யுமான ஆண்ட்ரூ கிரிபித்ஸை தற்போது கேட் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். “அவர் எனது திருமண வாழ்க்கையின் போது பாலியல் ரீதியாகவும், உடல் மற்றும் மனதளவிலும் சித்ரவதை செய்தார்” என்று அவர் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

ஆண்ட்ரூ மற்றும் கேட் இருவரும் 2013 ஆம் ஆண்டு திருமணமாகினர். ஆனால் 2018ஆம் ஆண்டில் பிரிந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. விவாகரத்திற்குப் பிறகு, குழந்தையின் காவலுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், கேட் தன்னுக்கும் தனது மகளுக்கும் மீதான துன்புறுத்தல்களை ஆதாரங்களுடன் விளக்கி, நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கேட் இற்கே சாதகமாக தீர்ப்பளித்தது.

தற்போது கேட், தனது திருமண வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களை ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். இதில், “நான் தூங்கும் போதும் கூட, கணவர் என்னை வற்புறுத்தி வந்தார். பலமுறை அடித்து, கட்டிலில் இருந்து மிதித்து தள்ளினார். என் குழந்தை பசியில் அழும் போதும் கூட, அவர் அவளிடம் கோபத்துடன் நடந்துகொண்டார். நான் என் குழந்தையின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கையை எடுத்தேன்” என அவர் கூறியுள்ள ஆவணக் கூறுகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

பிரபலமாக இருந்த ஆண்ட்ரூ கிரிபித்ஸ், தம் அலுவலகத்தில் பணியாற்றிய இரண்டு பெண்களுக்கு 2000க்கும் மேற்பட்ட ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாகப் புகார் எழுந்ததையடுத்து, 2019ஆம் ஆண்டு தனது எம்.பி. பதவியிலிருந்து விலகியிருந்தார். இதனையடுத்து, கேட் எலிசபெத் அவரை முந்திய பர்ட்டன் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வென்றும், மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றவராகவும் உள்ளார்.

இந்நிலையில், கேட் வெளியிட்ட ஆவணப்படம் இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “குடும்ப நல நீதிமன்றங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இது போன்ற குடும்ப வன்முறைகளை நீதிமன்றங்கள் எளிதில் புறக்கணிக்கக்கூடாது” என்று கேட் தனது ஆவணப்படத்தில் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு, ஒரு அரசியல் தலைவி நேரடியாக தன் துன்பங்களை வெளிப்படையாகக் கூறியிருப்பது பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.