“தூங்கும் சிங்கத்தை தொந்தரவு செய்யாதீர்கள்” என்ற பழமொழி, ஒரு முறை மறுபடியும் உண்மையென நிரூபிக்கப்பட்டது. சிங்கக் கூண்டுக்கு அருகே சென்ற ஒரு நபர், அதன் பிடியில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி உள்ளது. சமீபத்தில் இணையத்தில் பரவியுள்ள இந்த வீடியோவில், ஒரு ஆண் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு அருகே ஒருவர் செல்வதைக் காணலாம். ஆரம்பத்தில், அவர் சிங்கத்தை கிண்டல் செய்கிறார் போல் தோன்றுகிறது. ஆனால், சில நொடிகளில் நிகழ்ந்த காட்சி மூச்சை பிடிக்க வைத்தது.

அதில், கூண்டில் அமைதியாக இருந்த சிங்கம் திடீரென விரைந்து, அந்த நபரின் காலை தனது வலுவான பற்களால் பிடித்தது. மனிதனின் கால் சிங்கத்தின் தாடை பிடியில் சிக்கிக்கொண்டது. இந்த திடீர் தாக்குதலால் அந்த நபர் பீதி மற்றும் வேதனையில் கத்துகிறார். இதனை கவனித்த மற்றொரு நபர், விரைந்து வந்து குச்சியால் சிங்கத்தை மிரட்ட, சிங்கம் காலை விடுவிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.

 

வீடியோவில் சிங்கம் பெரிதாக வலிமையை பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் பிடியின் ஆபத்துத்தன்மை மிகுந்தது என்பதையும், எந்தளவுக்கு இது தீவிரமாக முடிந்திருக்க வாய்ப்பு இருந்தது என்பதையும் இது உணர்த்துகிறது. இந்தக் காட்சி தற்போது ‘X’  உள்ளிட்ட சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான பார்வைகள் மற்றும் கருத்துகளுடன் வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் தொடர்பான பாதுகாப்பு விதிகளை மீறினால், எவ்வாறு மனித வாழ்க்கையே ஆபத்தில் சிக்கலாம் என்பதற்கான உண்மை உதாரணமாக இந்த வீடியோ விளங்குகிறது.

மேலும் விலங்குகள் மீது தவறான முறையில் நடந்து கொள்ளும் பழக்கம், பொழுதுபோக்காக துவங்கி, பெரும் அபாயமாக முடியும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.