மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் வார்ஜே பகுதியில் உள்ள ஒரு சலூனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின்போது குற்றவாளியை போலீஸார் துணிச்சலாக மடக்கிப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
வார்ஜே பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில், முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். திடீரென துப்பாக்கி முழங்கிய சத்தம் கேட்டதும், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தத் தாக்குதலில் ஒரு இளைஞர் படுகாயமடைந்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த இடத்திற்கு மிக அருகிலேயே இருந்தனர். சத்தம் கேட்டவுடன் சற்றும் யோசிக்காத போலீஸார், குற்றவாளியிடம் துப்பாக்கி இருப்பதைக் கண்டும் அஞ்சாமல், அவரை நோக்கிப் பாய்ந்தனர்.
पुणे शहरातील वारजे परिसरात शुक्रवारी रात्री अंदाधुंद फायरींग pic.twitter.com/fBezBs1I40
— News18 Marathi (@News18_marathi) April 25, 2026
குற்றவாளி தொடர்ந்து சுட முயற்சிப்பதற்குள், ‘சிங்கம்’ பட பாணியில் பாய்ந்துச் சென்று அவரைப் பிடித்து கீழே தள்ளிக் கைது செய்தனர். போலீஸார் மட்டும் சில நொடிகள் தாமதித்திருந்தால், அந்தப் பகுதியில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும். போலீஸாரின் இந்தத் தீரச் செயலுக்குப் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கைது செய்யப்பட்ட நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனே நகரில் சமீபகாலமாக ரவுடி கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
