ஹரியாணா மாநிலம் குருகிராமில், 29 வயது இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாக்பூரைச் சேர்ந்தவர் ரோஹித் லால் (29). இவர் புது தில்லியில் உள்ள இந்திய தரக்கட்டுப்பாட்டு கவுன்சிலில்  பணியாற்றி வந்தார். இவர் ஒரு வாடகை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

வியாழக்கிழமை காலை, வழக்கம்போல ரோஹித்துடன் அலுவலகம் செல்லும் அவரது சக ஊழியர், அவரைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால், ரோஹித் அழைப்பை எடுக்காததாலும், கதவு பூட்டப்பட்டிருந்ததாலும் சந்தேகம் அடைந்த சக ஊழியர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரோஹித் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அறையில் சோதனை செய்தபோது, சில மருந்துகள் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தும் துணை உணவுகளின் (Health Supplements) உறைகள் சிக்கியுள்ளன. இதனால், பாலியல் ஆற்றலை அதிகரிக்கும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ரோஹித்துக்குத் திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. அவர் தனது வருங்கால மனைவியைச் சந்திக்க அழைத்திருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். “மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதியாகத் தெரியும்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.