டெல்லியில் ஐஐடி பட்டதாரியும், ஐஏஎஸ் கனவுடன் UPSC தேர்வுக்குத் தயாராகி வந்த 22 வயது இளம் பெண், முன்னாள் வீட்டு வேலைக்காரனால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் 12-ம் வகுப்பில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 22-ம் தேதி காலை, பெண்ணின் பெற்றோர் ஜிம் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொலையாளி ராகுல் மீனா, வீட்டின் மொட்டை மாடியில் இருந்த படிப்பு அறைக்குள் புகுந்துள்ளார்.
அங்கு படித்துக்கொண்டிருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு, தலையில் விளக்கு (Lamp) மற்றும் கனமான பொருட்களால் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளார். அந்த நிலையிலேயே அந்தப் பெண்ணை மிருகத்தனமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த காமமிருகம்.
இந்தக் கொடூரம் இத்துடன் நிற்கவில்லை. வீட்டில் இருந்த லாக்கரைத் திருடத் திட்டமிட்ட ராகுல், அந்த லாக்கர் கைரேகை (Thumb Impression) மூலம் மட்டுமே திறக்கும் என்பதை அறிந்து, மயங்கிக் கிடந்த பெண்ணை மாடியில் இருந்து தரதரவென ரத்தம் சொட்டச் சொட்டப் படிக்கட்டுகளில் இழுத்து வந்துள்ளான்.
லாக்கர் அருகே கொண்டு வந்து அப்பெண்ணின் விரலை வைத்துத் திறக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவன், சார்ஜிங் கேபிளைக் கொண்டு அப்பெண்ணின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளான். பின்னர் லாக்கரை உடைத்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, தனது ரத்தம் படிந்த உடைகளை மாற்றிவிட்டு அப்பெண்ணின் சகோதரரின் உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
டெல்லி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துப்பு துலக்கி, ராஜஸ்தான் வரை விரட்டிச் சென்று குற்றவாளி ராகுல் மீனாவைக் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவன் ஒரு ஆன்லைன் சூதாட்ட அடிமை என்பதும், இந்தப் பெண்ணைக் கொலை செய்வதற்கு முதல் நாள் தான் ராஜஸ்தானில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டுத் தப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.
ஒரு மிகச்சிறந்த திறமைசாலியாக வளர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டிய ஒரு இளம் பெண்ணின் உயிர், ஒரு முன்னாள் வேலையாளின் வஞ்சகத்தால் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
