சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காதலி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிலாஸ்பூர் அபிலாஷா வளாகத்தில் ஏப்ரல் 21-ஆம் தேதி நள்ளிரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் சிரஞ்சீவ் பாண்டே (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனம் மற்றும் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். காயமடைந்தவர் அவரது தோழி கரிமா சிங் (23) ஆவார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், சம்பவத்தன்று இரவு 34-வது பிளாக் மாடியில் அமர்ந்து மது அருந்தியபடி பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு 3 மணியளவில், மாடி கைப்பிடிச் சுவரில் அமர்ந்திருந்த சிரஞ்சீவ், மது போதையில் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற கரிமாவும் நிலைதடுமாறி அவருடன் சேர்ந்து கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த இருவரும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் யாரும் அங்கு நடமாடவில்லை. சுமார் 3 மணி நேரம் உயிருக்காகப் போராடிய சிரஞ்சீவ், உதவி கிடைக்காததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலை 6 மணியளவில் இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
முதலில் இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கரிமா அளித்த வாக்குமூலத்தில், “சிரஞ்சீவ் போதையில் தவறி விழுந்ததாகவும், அவரைக் காப்பாற்ற முயன்றபோது தானும் கீழே விழுந்துவிட்டதாகவும்” தெரிவித்துள்ளார்.
கரிமாவுக்கு முதுகுத்தண்டு மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து மூத்த போலீஸ் சூப்பரண்டு (SSP) ரஜனேஷ் சிங் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை அல்ல, எதிர்பாராமல் நடந்த விபத்து என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
