உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷயரில், கடந்த 40 ஆண்டுகளாகத் தனது அடையாளத்தை மறைத்து சட்டவிரோதமாக வசித்து வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் பாதுகாப்பு முகமையினரும் உள்ளூர் போலீஸாரும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வாசித் என்பவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வந்த இவரது தாய் பில்கிஸ், தனது கணவரை விவாகரத்து செய்த பிறகு, புலந்த்ஷயரைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்துகொண்டார். இதற்காக நான்கு தசாப்தங்களுக்கு முன்பு வாசித் தனது மூன்று சகோதரிகளுடன் இந்தியா வந்துள்ளார்.

காலப்போக்கில் இவரது சகோதரிகளுக்கு நீண்டகால விசா கிடைத்து அவர்கள் இங்கேயே குடியேறினர். ஆனால், வாசித்தின் விசா விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.

 வாசித்தின் பின்னணியை ஆய்வு செய்தபோது, அவர் ஏற்கனவே 2012-ஆம் ஆண்டு மீரட்டில் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, மீண்டும் பாகிஸ்தான் செல்லாமல் இருக்கவும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவும் போலி ஆவணங்கள் மூலம் இந்திய அடையாளத்தைப் பெற்றுள்ளார்.

 வாசித் முறைகேடாக ஓட்டுநர் உரிமம் மற்றும் சில இந்திய அடையாள அட்டைகளை (அரசு ஆவணங்கள்) பெறுவதற்கு உள்ளூர் அளவில் யார் உதவியது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் சிங் கூறுகையில், “இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரம். அவர் இத்தனை ஆண்டுகளாக யாருடன் தொடர்பில் இருந்தார், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. மோசடி மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்றார்.