மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், 16 வயது சிறுமி ஒருவரின் கூந்தலை அவரது பெற்றோரே வலுக்கட்டாயமாக மழித்து, அவரை வீட்டுச் சிறையில் வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி மாவட்டம் வருட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அச்சிறுமி மீது தவறான பார்வை இருந்ததாகவும், அவர் சிறுமியைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு பெற்றோர் கூறியும், அச்சிறுமி புகார் அளிக்க மறுத்ததாகத் தெரிகிறது.
மகளின் அழகும், அவரது அடர்த்தியான கூந்தலுமே இளைஞர்கள் அவர் பால் ஈர்க்கப்படக் காரணம் என அந்தப் பெற்றோர் விசித்திரமாக எண்ணியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சிறுமியின் எதிர்ப்பையும் மீறி அவரது தலைமுடியை முழுவதுமாக மழித்து மொட்டையடித்துள்ளனர். மேலும், அவர் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என வீட்டுச் சிறையிலும் வைத்துள்ளனர்.
பெற்றோரின் இந்தச் செயலால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, எப்படியோ வீட்டை விட்டு வெளியேறி வருட் காவல் நிலையத்திற்குச் சென்று தஞ்சம் புகுந்தார். தனது சொந்தப் பெற்றோர் தனக்கு இழைத்த கொடுமைகள் குறித்து அவர் அளித்த புகாரைக் கேட்டு போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர்.
சிறுமியின் புகாரைத் தொடர்ந்து, அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்தச் சிறுமி மீட்கப்பட்டு, அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், அந்தச் சிறுமியைப் பின்தொடர்ந்த இளைஞர் யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
