உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திருடன் ஒருவர் வீட்டின் கேட் ஏற முடியாமல் திணறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களைச் சிரிப்பலைகளில் ஆழ்த்தியுள்ளது. காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் திருடும் நோக்கத்துடன் நபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்துள்ளார். ஆனால், அங்கிருந்த இரும்பு கேட்டைத் தாண்டிச் செல்ல அவர் எடுத்த முயற்சி தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

வழக்கமாகத் திருடர்கள் லாவகமாகச் சுவர் ஏறி குதிப்பார்கள். ஆனால், இந்த நபரோ கேட்டைப் பார்த்ததும் பயந்தது போலவும், அதை எப்படிக் கடப்பது என்று தெரியாமல் தடுமாறியும் உள்ளார். பலமுறை முயன்றும் வழுக்கி விழுவதும், பாதியிலேயே தயங்கி நிற்பதுமாக அவரது நடவடிக்கைகள் ஒரு தேர்ந்த திருடனைப் போலன்றி, முதன்முதலில் திருட வந்தவரைப் போல இருந்துள்ளது.

 இந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் நெட்டிசன்கள், அந்தத் திருடனை நீயெல்லாம் எப்படித்தான் திருடன் ஆவாயோ? என்று இந்தி திரைப்பட வசனங்களைக் கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்தப் பதிவிற்குப் பல சுவாரஸ்யமான கமெண்டுகள் குவிந்து வருகின்றன. “இது திருடும் திட்டமா? அல்லது திடீர் ஜிம்னாஸ்டிக்ஸ் தேர்வா?”, “கேட்டைத் தாண்டவே இவ்வளவு நேரமா? இதைவிடத் பெல் அடித்து உள்ளே நுழைந்திருக்கலாம்”, “திருடனாக வந்தவர் இப்போது இணையதளக் கலைஞராக மாறிவிட்டார்” எனப் பலரும் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ நகைச்சுவையாக இருந்தாலும், குடியிருப்புகளில் இரும்பு கேட்டுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் எந்தளவிற்கு முக்கியம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. தற்போது அந்த நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.