ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையவுள்ள 7 எம்.பி.க்களை, சமையலுக்குப் பயன்படும் 7 மசாலாப் பொருட்களுடன் ஒப்பிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கிண்டலடித்துள்ளார்.

ராகவ் சதா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 4 பேர் குறித்தும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பகவந்த் மான், “இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயப் பொடி, மிளகாய், மிளகு மற்றும் மல்லி ஆகிய இந்த 7 பொருட்களும் சேர்ந்து ஒரு காய்கறி உணவை ருசியானதாக மாற்றலாம்; ஆனால், இவை மட்டுமே தனியாக ஒருபோதும் முழுமையான ‘காய்கறி’  ஆக முடியாது” எனச் சாடியுள்ளார்.

அதாவது, கட்சி என்ற துணையின்றி இவர்களுக்குத் தனிப்பட்ட அரசியல் அடையாளம் ஏதுமில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று மாலைக்குள் இந்த 7 எம்.பி.க்களும் அதிகாரப்பூர்வமாக பாஜக நாடாளுமன்றக் குழுவில் இணைவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு நாடாளுமன்றத்தில் விழுந்த மிகப்பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பஞ்சாப் அமைச்சர் பால்பீர் சிங் கூறுகையில், “எங்கள் எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்கள் துரோகம் செய்துவிட்டனர்; இவர்களுக்குத் துளியாவது நேர்மை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும்” என ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார். பாஜகவின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டமே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.