
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் உதயநிதி இதுதான் என் கடைசி சினிமா பேட்டி என அறிவித்து நேற்று நிரூபர்களிடம் கூறியிருப்பதாவது “பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை பார்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது தற்போது நிறைவேறிவிட்டது.
மேலும் மிஷ்கின், மகிழ் திருமேனி டைரக்டில் நடிக்க விரும்பிய நிலையில், அதுவும் நிறைவேறி விட்டது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடிக்கையில் “மாமன்னன்” என் கடைசி படம் என்பதில் உறுதியாக இருந்தேன். தற்போதும் நான் உறுதியாக இருக்கிறேன். முதலில் நான் திரைத்துறைக்கு வர மாட்டேன் என்று சொன்னேன். பிறகு சினிமாவிற்கு வந்தேன். மேலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறினேன். எனினும் அரசியலுக்கு வந்து அமைச்சராகவும் ஆகி விட்டேன். இந்நிலையில் என் முன் மக்களுக்கான பணிகள் நிறைய காத்திருக்கிறது. அதையெல்லாம் செய்து முடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.