விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சிகளையும், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய் போன்றவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கொள்கை, லட்சியம் எதுவுமே இல்லாமல் வெறும் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டங்கள் பெருகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் அறிவே இல்லாத சில ‘அட்டைகள்’ என்னதான் புலம்பினாலும் களத்தில் வெற்றி பெறப்போவது திமுக தான் என்று அடித்துக் கூறினார்.

தேர்தல் நெருங்குவதால் தமிழகத்திற்குப் புதுப் புதுக் கடைகள் (புதிய கட்சிகள்) வர ஆரம்பித்துள்ளன என்றும், தேர்தல் திருவிழா முடிந்ததும் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் மிகக் காரசாரமாகச் சாடினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை பாஜகவின் ‘கிளை அமைப்பு’ என்றும், எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ‘முரட்டு அடிமை’ என்றும் விமர்சித்தார்.

தமிழகம் திராவிட மாடல் ஆட்சியில் 11.19% வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி கூறும் ‘டபுள் என்ஜின்’ ஆட்சி நடக்கும் மாநிலங்கள் இதில் பாதியைக்கூடத் தொடவில்லை என்று புள்ளிவிவரங்களை முன்வைத்தார். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், முதல்வர் ஸ்டாலினின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டு 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் உதயசூரியன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.