தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாமக இணையாது என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “திமுக கூட்டணியில் பாமக இணைந்தால், விசிக அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறும்” என்று அதிரடியாகத் தெரிவித்திருந்தார். விசிக-வின் இந்த வெளிப்படையான எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று ராமதாஸ் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுக கூட்டணியில் இருப்பதால், வரவிருக்கும் தேர்தலைத் தனித்து எதிர்கொள்வது அல்லது மாற்று வியூகங்களை வகுப்பது குறித்து ராமதாஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. மேலும் ராமதாஸ் தற்போது யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு செய்தி பரவுவது குறிப்பிடத்தக்கது.
