தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை “ஜென்சி அலை” மற்றும் “ரசிக மனோபாவம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், இது ஒன்றும் அர்த்தமுள்ள அரசியல் மாற்றம் கிடையாது என விமர்சித்துள்ளார்.

திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து, பல தசாப்தங்களாக மக்களுக்காக உழைத்த அனுபவம் வாய்ந்த தலைவரான திருமாவளவனை முதலமைச்சராக முன்மொழிந்து, அந்த இலக்கை நோக்கி நகர வேண்டும் என அவர் தனது பதிவில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ​மக்கள் உண்மையிலேயே மாற்றத்தை விரும்பினால், தியாகம் மற்றும் போராட்டக் குணமிக்க ஒரு தலைவரையே அரியணையில் ஏற்ற வேண்டும் என்றும், அதற்குத் திருமாவளவனே தகுதியானவர் என்றும் சிந்தனைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை ஒரு தற்காலிகமான உணர்ச்சிப் பெருக்கே தவிர, அது ஆழமான அரசியல் புரட்சி அல்ல என்பது போன்ற அவரது கருத்துக்கள் இணையத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளன. திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராகச் சிந்தனைச்செல்வன் முன்னிறுத்தியிருப்பது, கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.