தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் தமிழக வெற்றி கழகம் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 இடங்களுக்கு இழுபறி நீடிப்பதால் “தொங்கு சட்டசபை” நிலை உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள கருத்து இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

“குதிரை பேரங்கள் மற்றும் அழுத்தங்களால் அமையப்போகும் நிலையற்ற ஆட்சியை விட, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு மறுதேர்தல் நடத்துவதே சிறந்தது” என அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ​குறிப்பாக, ‘வாக்குக்குப் பணம்’ என்ற முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடத்தினால் மட்டுமே மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது தெரியும் என அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை மறுதேர்தல் நடத்தப்பட்டால் விஜய் அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்றும், பாஜக ஒரு சீட் கூட ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை, அங்கு ஒரு புதிய தொடக்கம் தேவை என்றும் அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஒருபுறம் ஆதரவு பெருகினாலும், “மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க மறுதேர்தல் தேவையா?” என நெட்டிசன்கள் பலரும் ஸ்ரீதர் வேம்புவின் கருத்திற்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.