தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியைப் பறிகொடுத்த திமுக இப்போது தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 7) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​மற்றொருபுறம், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய முடியாமல் 10 இடங்களில் பின்தங்கியுள்ள தவெக தலைவர் விஜய், ஆட்சியமைப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தவெக-விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், மெஜாரிட்டிக்கு இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்த 6 இடங்களைப் பிடிக்க விசிக, இடதுசாரிகள் அல்லது பிற சுயேச்சை எம்எல்ஏக்களுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் ஒருவித இழுபறி நீடித்து வருகிறது. இன்றைய திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பிறகு, தமிழக அரசியலில் இன்னும் பல அதிரடித் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.