திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணம் தள்ளிப்போன நிலையில், அவரது ஜாதகத்தில் உள்ள தடைகளை நீக்குவதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் செய்துள்ள மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமைச் செயல்கள் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்தப் பெண்ணின் நண்பர் மூலமாக அறிமுகமான நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்த ஜோதிடர், திருமணத் தடைகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி தொடர்ந்து பலமுறை அந்தப் பெண்ணை நேரில் வரவழைத்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றியதுடன், அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பலமுறை கட்டாயப்படுத்தித் தாக்கியும் வந்துள்ளார்.
இதுமட்டுமின்றி, பல்வேறு காரணங்களைக் கூறி அந்தப் பெண்ணிடமிருந்து பல லட்சம் ரூபாயைத் தொடர்ந்து கறந்து வந்துள்ளார். குறிப்பாக, தனது உறவினர் விபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறி சமீபத்தில் கூட 1.5 லட்சம் ரூபாயை அந்த ஜோதிடர் வாங்கியுள்ளார். இதற்கிடையே, அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விவகாரம் அந்தப் பெண்ணுக்குத் தெரியவரவே, இது குறித்து அவர் ஜோதிடரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஜோதிடர், அந்தப் பெண்ணைக் கடுமையாக மிரட்டியதுடன், தமக்குக் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், உன்னைக் கொன்று விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்துத் துரத்தியடித்துள்ளார்.
இதனால் மனமுடைந்துபோன பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு கோவை சரக ஐ.ஜி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இதுதவிர திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் விரிவான புகார் மனுக்களை அவர் அனுப்பி வைத்துள்ளார். பெண்ணின் திருமணம் என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி ஜோதிடர் ஒருவரே நடத்தியுள்ள இந்த மோசடி மற்றும் வன்கொடுமைச் செயல்கள் கோவை மற்றும் திருப்பூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
