சென்னை யானைகவுனி பகுதியில் கிணற்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நச்சுவாயு (விஷவாயு) தாக்கியதில் தந்தையும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அய்யனார். இவர்கள் இருவரும் சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழமுள்ள கிணறு ஒன்றைச் சுத்தம் செய்து, தூர் வாரும் பணிக்காகக் கிணற்றிற்குள் இறங்கியுள்ளனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் அடிப் பகுதியில் அடர்த்தியாகக் குவிந்திருந்த நச்சுவாயு திடீரென தாக்கியதில், இருவரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், கிணற்றில் இருந்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.