உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சாலையோரத்தில் யாரோ அனாதையாகக் கொட்டிவிட்டுச் சென்ற இரும்பு ஜிம் பிளேட்டுகளை அல்லிச் செல்வதற்காகக் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு கூடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் எதையாவது கண்டால் கடந்து சென்றுவிடும் மக்கள், இரும்புப் பொருட்கள் அனாதையாகக் கிடப்பதைக் கண்டதும் திரண்டு வந்து போட்டி போட்ட காட்சி, அந்த வழியே சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியின் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டு, அப்பகுதியே ஒரே கோலாகலமாகக் காட்சியளித்தது.
யாரோ ஒரு தொழிலதிபர் அல்லது கழிவுப்பொருட்களைச் சேகரிப்பவர், தேவையற்றவை என்று கருதி சாலையோரத்தில் கொட்டிவிட்டுச் சென்ற இந்த ஜிம் பிளேட்டுகள், அப்பகுதி மக்களுக்கு சட்டென்று ஒரு அதிர்ஷ்டப் பொருளாகத் தெரிந்துள்ளன.
இந்த செய்தி தீயாகப் பரவியதை அடுத்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையில் கிடைத்த பைகளுடனும், வாகனங்களுடனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களால் முடிந்த அளவுக்கு அந்த இரும்பு பிளேட்டுகளை அள்ளிச் செல்ல முயன்றதால், அந்த இடம் ஒரு பெரிய சந்தையைப் போல மாறியது.
ஆளாளுக்கு இரும்பு பிளேட்டுகளைப் போட்டி போட்டுக்கொண்டு வாரிச் சுருட்டியதால், கொட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய இரும்புக் குவியல் வெறும் சில மணி நேரங்களிலேயே இருந்த இடம் தெரியாமல் சுத்தமாக மாயமானது. அனாதையாகக் கிடந்த இரும்பை எடுத்துச் சென்று விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் மக்கள் இவ்வாறு திரண்டு வந்து அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
