அண்டை நாடான நேபாளத்தில் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு, ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியெடுத்துள்ளது. நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் ஆற்றங்கரையோரம் திடீரென சீறிப்பாய்ந்து வந்த வெள்ளப் பெருக்கின் பிரம்மாண்ட அலையைக் கண்டு, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்களும் பொதுமக்களும் அலறியடித்துக் கொண்டு ஓடும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

நொடிப் பொழுதில் ராட்சச உருவெடுத்து வந்த இந்த நீர் அலை, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தங்களின் வாழ்விடங்களையும் கனவுகளையும் சுருட்டிக் கொண்டு போகப்போகிறது என்பதை உணர்ந்த மனிதர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய அந்த வினாடிகள், பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கின்றன.

திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு அல்லது பனி ஏரி உடைந்ததன் காரணமாகவே இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீற்றத்துடன் பாய்ந்து வந்த வெள்ளநீரின் வேகத்திற்கு முன்னால் பிரம்மாண்டமான பாலங்கள், பல அடுக்கு கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் வெறும் அட்டையைப் போல நொறுங்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் பாய்ந்து வரும் திசையை நோக்கி நின்று கொண்டிருந்த மனிதர்கள், “இனி எங்கே ஓடித் தப்பிப்பது?” என்று கூட தெரியாமல் திசையெங்கும் சிதறி ஓடிய காட்சிகள், இயற்கை சீற்றத்தின் கொடூரமான முகத்தை மீண்டும் ஒருமுறை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளன. நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்கு இடையே உயிருக்குப் போராடுபவர்களை மீட்பதற்கான ராணுவ வீரர்களின் முயற்சிகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், அந்த வெள்ளத்தின் சத்தமும் ஓடும் மனிதர்களின் அலறல் சத்தமும் அடங்கிய அந்தக் காணொளி, இணையத்தைப் பார்ப்போரின் கண்களைக் குளமாக்கி வருகிறது.

“>