மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமம்தான் ‘ஃபோஃப்சாண்டி’. நான்கு பக்கமும் உயரமான மலைகளாலும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்டுள்ள இந்தக் கிராமத்தில், ஒரு நாளின் பகல் நேரம் வெறும் 6 முதல் 7 மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்பது இதன் மிக விசித்திரமான அம்சமாகும்.

சுற்றிலும் இருக்கும் உயரமான மலைகள் சூரிய வெளிச்சத்தைத் மறைப்பதால், இங்குச் சூரிய உதயம் மிகவும் தாமதமாகவும், சூரிய அஸ்தமனம் வழக்கத்தை விட மிக முன்கூட்டியே நடந்துவிடுகிறது. இதன் காரணமாக, மற்ற ஊர்களை விட இந்த கிராமத்து மக்கள் மிகவும் குறைவான நேரமே சூரிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர்.

இந்தக் கிராமத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘ஃபோஃப்’  என்ற பிரிட்டிஷ் அதிகாரி ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வெடுப்பதற்காக இந்த இடத்திற்கு வந்து செல்வாராம். அவரின் பெயராலேயே இந்த ஊருக்கு ஃபோஃப்சாண்டி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குச் சான்றாக அந்த அதிகாரி தங்கியிருந்த விருந்தினர் மாளிகையின் எச்சங்கள் இன்றும் அங்கு உள்ளன.

மேலும், புகழ்பெற்ற மண்டோவி ஆறு இந்த கிராமத்தின் எல்லைப் பகுதியில் இருந்துதான் உருவாகிறது. பழங்காலத்தில் மண்டோவி என்ற முனிவர் இங்குள்ள குகையில் தவம் செய்ததால், அவரின் நினைவாக இந்த ஆற்றுக்கு மண்டோவி ஆறு என்று பெயர் வந்ததாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கும் வரலாற்றுச் சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்த ஃபோஃப்சாண்டி கிராமம், அதன் தனித்துவமான குறுகிய பகல் நேரத்தால் சுற்றுலாப் பிரியர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது.