மகாராஷ்டிர பொது சேவை ஆணையம் நடத்திய மருந்து ஆய்வாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு ஊழலின் பின்னணியில் ஒரு காதல் விவகாரமும், அதைத் தொடர்ந்த பிரிவும் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை பல அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வினாத்தாள் கசிவு சம்பவத்தில், பள்ளி முதல்வரான அம்ரித் பாட்டீல் என்பவர்தான் முக்கியச் சூத்திரதாரியாகச் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. நந்தூர்பார் மாவட்டத்தில் பள்ளி முதல்வராகப் பணியாற்றி வந்த இவர், மாநில அரசின் ‘சிறந்த ஆசிரியர்’ விருதைப் பெற்றவர் ஆவார். ஒரு சிறந்த ஆசிரியரே தனது மகளுக்காக இதுபோன்ற தவறான செயலில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தன் மகள் ரிதுஜா பாட்டீலுக்கு வினாத்தாள் கிடைப்பதற்காக, அம்ரித் பாட்டீல் ஒரு அகாடமியின் இயக்குநரான பிரவீன் பாட்டீல் என்பவருக்கு லட்சக்கணக்கான ரூபாயைக் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அந்த வினாத்தாளைப் பயன்படுத்தி ரிதுஜாவும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும், இந்த வினாத்தாளை அம்ரித் பாட்டீல் தனது மகளுக்கு மட்டும் கொடுத்தாரா அல்லது வேறு நபர்களுக்கும் விற்றாரா என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் சுவாரசியமான பின்னணியாக ஒரு காதல் கதை உள்ளது. ரிதுஜாவும் கௌரவ் பாட்டீல் என்பவரும் காதலித்து வந்த நிலையில், ரிதுஜா அந்த வினாத்தாளைத் தன் காதலன் கௌரவிற்கும் கொடுத்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதல் முறிந்தது. இதனால் ஆத்திரமடைந்த கௌரவ், வினாத்தாள் கசிந்தது குறித்து நேரடியாக MPSC அமைப்பிடம் புகார் அளித்துள்ளார்.
ஒரு காதலனின் புகாரால் தான் இந்த மிகப்பெரிய வினாத்தாள் கசிவு ஊழல் வெளியே தெரியவந்துள்ளது. மாநில அரசின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஒருவரே ஆசிரியர் தொழிலுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபம் வெளிப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
