அரியானா மாநிலம் ரோஹட் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய அளவிலான தடகள வீரர் ரோகித் திவாகர் (வயது —), உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்ள கடந்த 27ஆம் தேதி சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சியில் சிலர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட ரோகித் திவாகர் அவர்களை தட்டிக்கேட்டதாக தெரிகிறது.
பின்னர், திருமண விழா முடிந்து ரோகித் திவாகர் தனது நண்பர்களுடன் காரில் புறப்பட்டார். அதே நேரத்தில், மூன்று கார்களில் வந்த கும்பல் ரோகிதின் காரை பின்தொடர்ந்து சென்று இடைமறித்துள்ளது. காரை நிறுத்தி, அந்த கும்பல் ரோகித் திவாகரை இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கியதால் அவர் கடுமையாக காயமடைந்தார். உடனே நண்பர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரோகித் திவாகர், கடந்த இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் நேற்று துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை பிடிக்க விசாரணை குழு தீவிரமாக தேடி வருகிறது.
