மராட்டிய மாநிலம் நந்தெட் மாவட்டத்தில், 20 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தெட் மாவட்டத்தைச் சேர்ந்த சாக்ஷம் டேட் என்ற இளைஞரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆஞ்சலின் சகோதரர்கள் மூலம் சாக்ஷமுடன் அறிமுகமான அவர், தொடர்ந்து சாக்ஷமின் வீட்டுக்கும் வந்து சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதல் தொடர்பு ஆஞ்சலின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தபோது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பலமுறை மிரட்டியும், தடுக்க முயன்றும் ஆஞ்சல் தனது காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்யப் போவதாக ஆஞ்சலின் குடும்பத்தினர் அறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அவரது தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் கடந்த வியாழக்கிழமை சாக்ஷமைக் கடத்திய பின்னர் இரக்கமின்றி தாக்கியுள்ளனர். தலையில் சுட்டு கொலை செய்ததுடன், பின்னரும் கல்லால் நசுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாக்ஷமின் மரணத்தால் அவரது குடும்பம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஆஞ்சல், அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் தனது நெற்றியில் குங்குமம் பூசி, சாக்ஷமின் உடலை மணந்ததாக தெரிவித்தார். “சாக்ஷம் இறந்தாலும், எங்கள் காதல் வெற்றிபெற்றது; அது இன்னும் உயிருடன் உள்ளது. என் தந்தையும் சகோதரர்களும்தான் தோற்றனர். இனி நான் சாக்ஷத்தின் மனைவியாக அவர்களின் வீட்டிலேயே வாழப் போகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

மேலும் சாக்ஷமைக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.