கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் நாகேஷ்வர். அதே கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் அவர் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவியை மிரட்டி, அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதை யாரிடமும் வெளிப்படுத்தினால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மிரட்டலால் பயந்த மாணவி, சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாகேஷ்வர், கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியில், தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட மாணவி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் பகிர்ந்து கதறி அழுதுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக பெலகாவி கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேராசிரியர் நாகேஷ்வரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.