இன்று டிசம்பர் 1 முதல் பல புதிய மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றை ஒபார்ப்போம்: அதன்படி
1. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) – சேர்வதற்கான காலக்கெடு நிறைவு
மத்திய அரசு ஊழியர்களுக்கான Unified Pension Scheme (UPS)-இல் சேர்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) இலிருந்து UPS-க்கு மாற விரும்பும் ஊழியர்கள் இந்த தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஏற்கனவே ஒருமுறை காலக்கெடுவை நீட்டித்திருந்ததால், டிசம்பர் 1 முதல் மீண்டும் சாளரம் திறக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2. ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்திர ஆயுள் சான்றிதழ் – கடைசி நாள்
லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தர வேண்டிய வருடாந்திர ஆயுள் சான்றிதழின் (Life Certificate) கடைசி தேதி நவம்பர் 30. டிஜிட்டல் ஜீவன் பிரமான் முறையிலும், வங்கி/தபால் நிலையங்களிலும் சமர்ப்பிக்கலாம். காலக்கெடு தவறினால், ஓய்வூதியத் தொகை தற்காலிகமாக நிறுத்தப்படும். டிசம்பர் 1க்குப் பிறகு சமர்ப்பிப்பவர்கள் தகவல் மீள்சரிபார்ப்பால் தாமதத்தை சந்திக்க வேண்டி வரும்.
3. முக்கிய வரித்தொடர்பான தாக்கல்கள் – இறுதி நாள்
பிரிவுகள் 194-IA, 194-IB, 194M, 194S ஆகியவற்றின் கீழ் அக்டோபரில் கழிக்கப்பட்ட TDS-க்கான அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 30. மேலும்: பிரிவு 92E-இன் கீழ் பரிமாற்ற விலை (Transfer Pricing) அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கும் கடைசி நாள். பன்னாட்டு குழுக்களுக்கு உட்பட்ட இந்திய நிறுவனங்கள் படிவம் 3CEAA-வை நவம்பர் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு நேற்று முடிவடைந்துவிட்டது. இதனால் டிசம்பர் 1 முதல் தாமத அபராதங்கள் மற்றும் அறிவிப்புகள் அனுப்பப்படலாம்.
4. ரேஷன் கார்டு – கட்டாய ஆதார் சரிபார்ப்பு & டிசம்பர் 1 முதல் தானியங்கி தணிக்கை
அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் கட்டாய ஆதார் மறு சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், 2025 டிசம்பர் 1 முதல், மாநிலங்கள் முழுவதும் நகல் அட்டைகள், தகுதியற்ற அட்டைகள் கண்டறிய தானியங்கி ஆடிட்டிங் தொடங்குகிறது. ஆதார்–முகவரி–குடும்பத் தொகுதி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் அட்டைகள் வைத்திருந்தால் அவை ரத்து செய்யப்படும்.
5. 8-வது ஊதியக்குழு – டிசம்பரில் அடுத்த கட்ட நடவடிக்கைகள்
மத்திய அரசு ஊழியர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 8-வது ஊதியக்குழு அமைப்பதற்கான பரிந்துரைகளுக்கு முன்மொழிவு ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளது. இதனால் டிசம்பர் மாதத்தில்: குழு அமைப்பதற்கான விதிமுறைகள், தேவைப்படும் மாற்றங்கள் ஆகியவை மீது மத்திய அரசு இறுதி தீர்மானம் எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
6. பான்–ஆதார் இணைப்பு – டிசம்பர் 31க்கு முன் கட்டாயம்
பான்–ஆதார் இணைப்பு டிசம்பர் 31க்குள் செய்திருக்க வேண்டும். இல்லையெனில்: ஜனவரி 1, 2026 முதல் பான் செயலிழக்கும். சம்பளக் கிரெடிட், எஸ்ஐபி முதலீடு, வரித்தொடர்பான பரிவர்த்தனைகள் எல்லாவற்றிலும் தடைகள் ஏற்படும். மேலும் வருமான வரித்துறை இதை கட்டாய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.
7. சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றம் அமைக்கப்படும் நிலையில் இன்று மாதத்தின் முதல் நாள் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி 10 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ. 1739.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
