மைசூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்த ஆதித்ய வர்மா (28), ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள தமது இல்லத்தில் திருமணமான இரண்டாம் நாளிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி நாவ்யா என்ற பெண்ணுடன் ஆதித்ய வர்மாவுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், நவம்பர் 27-ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஆதித்ய வர்மா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆதித்ய வர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. எனினும், அவரது மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) விசேரா அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர். இந்த எதிர்பாராத மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை என அல்வார் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.