கொல்கத்தாவில் கிழக்கு பெருநகர புறவழிச்சாலை அருகேயுள்ள பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பேருந்துக்காகக் காத்திருந்த 28 வயது இளம்பெண் ஒருவரை, அவருக்கு அறிமுகமான நபர் உட்பட 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலவந்தமாக காரில் ஏற்றப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மதுபானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். பின்னர், காரிலேயே அப்பெண்ணை மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
மைதான் பகுதியில் காரை நிறுத்தி, அப்பெண்ணை இறக்கிவிட்ட அந்தக் கும்பல் தப்பி ஓடியது. தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
